பங்குகள்
Thanks: Vikatan
பிரச்னைகளும் சச்சரவுகளும் இல்லாத வியாபாரங்கள் எதுவும் கிடையாது. பங்குச் சந்தையும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால், பங்குச் சந்தை விவகாரத்தில் ஒரு லெவல் பிளேயிங் ஃபீல்ட் இருக்காது. புரோக்கர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்களாகவும் வழக்குகளில் அனுபவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த வல்லமையுள்ளவர்களாகவும் அனுபவமற்றவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் தலைகீழாகவும் இருக்கும்.
பிரச்னைகள் பெரிதாகி இன்வெஸ்டார் கிரீவன்ஸ் செல்லுக்கு அல்லது ஆர்பிட்ரேஷனுக்கு எடுத்துச் செல்லும்போது எதைச் சொல்வது எதை விடுப்பது என்பது சிறு முதலீட்டாளருக்குத்தெரிந்திருக்காது. அந்த நுணுக்கங்களை எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.
சண்முகம்...
'லா பாயின்ட்' சண்முகம் என்றால்தான் சட்டென அந்தப் பகுதியில் எல்லாருக்கும் புரியும். அதனால் அவரை ஏதோ லாயர் என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம்! அரசு வேலையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். எதற்கெடுத்தாலும் விதிமுறைகளைக் காட்டிக்காட்டியே இந்தப் பெயரைச் சம்பாதித்தவர்!
அவ்வளவு உஷார் பார்ட்டியான சண்முகத்தின் இப்போதைய நிலை என்ன தெரியுமா?
வாழ்நாள் முழுக்கச் சேமித்த சேமிப்புகளை எல்லாம் இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். தன்னிடமிருந்த ஷேர் சர்டிஃபிகேட்களை டீமேட் செய்துவிடலாம் என்று போன இடத்தில்தான் வகையாக மாட்டிக்கொண்டார்.
சண்முகத்திடம் 42 கம்பெனிகளின் ஷேர்கள் சர்டிஃபிகேட்களாகவே இருந்தன. அவற்றை டீமேட் செய்துவிடலாம் என்று நாலைந்து இடங்களுக்குப் போய் அலைச்சல்தான் மிச்சமானது. காரணம் அங்கே அவரை நடத்திய விதம் அவருக்குத் திருப்தியைக் கொடுக்காததுதான்.
ஒருநாள் அவருக்கு புதிய புரோக்கர் அலுவலகக் கிளை ஒன்றின் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் வந்திருந்தது... அந்த விழாவுக்குப் போன இடத்தில்தான் சுரேஷை முதன் முதலாகச் சந்தித்தார். சண்முகத்தின் விதி யூ டேர்ன் எடுத்ததும் அங்கேதான்!
சுரேஷ்...
சுறுசுறுப்பின் இன்னொரு பெயர். கவர்ச்சியான முகவெட்டு, காந்தச் சிரிப்பு, பணிவான நடத்தை... இருபத்தியேழு வயது... வீட்டில் கர்ப்பமாக இருக்கும் அவனுடைய காதல் மனைவி மட்டுமே அவனது ஒரே சொந்தம். ஆனால், எந்த வேலைக்குச் சென்றாலும் இரண்டு வருஷத்துக்கு மேல் இருக்கமாட்டான். அவன் பிறந்த நேரம் அப்படி!
புதிய கிளை... புதிய வேலை.... ஆனாலும் இங்கேயும் அவனது தலைக்குமேல் கத்தி இருந்தது. திறப்பு விழாவுக்கு வந்திருந்த வி.பி. கிளையில் இருந்த எல்லோரையும் கூப்பிட்டு ரெவின்யூ டார்கெட் குறித்து கறாராகச் சொல்லிவிட்டார்.
''வியாபாரத்தில் வர்ற கமிஷன்ல உங்களுக்குத் தாராளமா இன்சென்டிவ் கிடைக்கும். ஆனா, மினிமம் டார்கெட்டை அச்சீவ் பண்ணலைன்னா மூணு மாச நோட்டீஸில் வேலை காலியாயிடும்! நான் மிரட்டல... ஆனா உண்மை அதுதான்!''
திறப்பு விழாவில் ஓடியாடிக்கொண்டிருந்தாலும் வி.பி. சொன்னது சுரேஷின் மனதில் ஓர் ஓரத்தில் அலையடித்துக்கொண்டுதான் இருந்தது.
அதிசயமாக விழா முடியும்வரை இருந்த சண்முகம் கிளம்பும்போது சுரேஷிடம், ''தம்பி எங்கிட்ட கொஞ்சம் ஷேர் சர்டிஃபிகேட்கள் இருக்கு... அதை டீமேட் பண்ணணுமே'' என்றார். ''ஒண்ணும் பிரச்னையில்ல சார்... நானே வந்து பார்க்கிறேன்'' என்றவன், சண்முகத்தின் அட்ரஸை வாங்கிக்கொண்டான்.
அன்று மாலையே வந்த சுரேஷ், ''சார் உங்க அட்ரஸ் புரூஃப், பான் நம்பர், ஏதாவது ஒரு போட்டோ ஐ.டி. இந்த மூணுக்கும் ஜெராக்ஸ் கொடுங்க'' என்று கேட்டு வாங்கி, கையோடு கொண்டு வந்திருந்த ஃபாரத்தில் அந்த விவரங்களை எழுதினான். ''சார் இந்த ஃபாரத்தில் ஜ் மார்க் உள்ள இடத்திலெல்லாம் கையெழுத்துப் போடுங்க'' என்றான். சண்முகமும் 43 கையெழுத்துக்களைப் போட்டார்.
''கணக்கை மூணே நாளில் ஆரம்பிச்சிடலாம் சார். உங்களோட ஷேர் சர்டிஃபிகேட் விவரங்களை பூர்த்தி பண்ணி கம்பெனிக்கு அனுப்பினா... உங்க கணக்கில் வரவு வச்சிடலாம்'' என்றான்.
சொன்னபடி மூன்று நாள் கழித்து கணக்குத் துவங்கியதற்கான கடிதத்தையும், டீமேட் செய்வ தற்கான படிவங்களையும் கொண்டுவந்து பூர்த்தி பண்ணி, கையோடு சர்டிஃபிகேட்களையும் வாங்கிக் கொண்டு போனான். உஷார் பார்ட்டியான சண்முகமும் சர்டிஃபிகேட்களை கொடுத்ததற்கான ரசீதையும் வாங்கிக்கொண்டார்!
அதன்பின் ஒவ்வொன்றாக டீமேட் ஆரம்பித்து, மூன்று மாதத்தில் 42 கம்பெனியும் டீமேட் ஆகி, அக்கவுன்ட்டில் கிரெடிட் ஆகி ஹோல்டிங் ஸ்டேட் மென்ட்டை வாங்கிய அன்றுதான் சண்முகம் நிம்மதியாகத் தூங்கினார்.
சுரேஷூக்கு சுத்தமாகத் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் 'வேலையை விட்டு எடுத்துவிடுவேன்' என்று வி.பி. சொன்ன காட்சிதான் திரும்பத் திரும்ப வந்தது. காரணம் ஆரம்பித்த மூன்று மாதத்தில் சுரேஷின் கிளை சரியான இலக்கை எட்டவில்லை. உடன் வேலை பார்க்கும் மணியிடம் சொல்ல... மணி அவனுக்கு ஒரு ஐடியா கொடுத்தான்.
''நான் இதுக்கு முன்னாடி இருந்த கம்பெனியில ஒருத்தர் ஏகப்பட்ட ஷேர்களை டீமேட் அக்கவுன்டில் வைத்துக்கொண்டு விலை ஏறினால் விற்று, இறங்கினால் வாங்கி நல்ல லாபம் சம்பாதிச்சார். அதுமாதிரி ஒரு க்ளையன்டை கண்டுபிடி. நல்ல புரோக்கரேஜ் கிடைக்கும். ரிஸ்க்கும் இருக்காது'' என்றான்.
நல்ல க்ளையன்ட் என்றதும் சுரேஷின் நினைவுக்கு சண்முகம்தான் வந்தார். மணி சொன்ன ஐடியாவை சண்முகத்தின் கணக்கில் செயல்படுத்தத் தொடங்கினான் - சண்முகத்திடம் சொல்லாமல்! அவர் போட்ட 43 கையெழுத்துதான் சுரேஷூக்குச் சாதகமாக இருந்தது!
உஷார் பார்ட்டியாக இருந்தும் சண்முகம் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்ட இடங்கள் என்னென்ன தெரியுமா?
1.டிரேடிங் அக்கவுன்ட் துவக்க கே.ஒய்.சி. ஃபாரம்.
2.டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்க கே.ஒய்.சி. ஃபாரம்.
3.டீமேட் அக்கவுன்டில் இருந்து ஷேர்களை மாற்றிக் கொள்ள புரோக்கருக்குக் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி.
4.எலெக்ட்ரானிக் கான்ட்ராக்ட் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் படிவம். (பூர்த்தி செய்யாமல்)
5.எலெக்ட்ரானிக் கான்ட்ராக்ட் பெற்றுக் கொள்ள இ-மெயில் முகவரி தெரிவிக்கும் படிவம். (பூர்த்தி செய்யாமல்)
சுரேஷ் மார்க்கெட்டுக்குப் புதிதாக இருந்தாலும் அவனது மார்க்கெட் போக்கு குறித்த கணிப்பு எப்போதும் தவறியதில்லை - இதுவரை! இந்த விற்று வாங்கும் விளையாட்டுக்கு சண்முகம் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் அவருடைய டிரேடிங் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணும் கே.ஒய்.சி. படிவத்தில் பவர் ஆஃப் அட்டர்னி பகுதியையும் (அதற்குத் தேவையான சாட்சி மற்றும் ஊர்ஜித கையெழுத்துக்களையும் உடனடியாகப் பெற்று), எலெக்ட்ரானிக் கான்ட்ராக்ட் பெற சம்மதம் தரும் ஃபாரத்தையும் எலெக்ட்ரானிக் கான்ட்ராக்ட் படிவத்தில் அவனே சண்முகத்தின் பேரில் உருவாக்கிய ஒரு இ-மெயில் ஐ.டி-யையும் பூர்த்தி செய்து, ஜோராக டிரேடைத் துவக்கினான்!
இனிஷியல் டெபாசிட்டுக்கு 10,000 ருபாய் பெறுமானமுள்ள ஷேரை விற்று கணக்கில் கிரெடிட் செய்தான். பின்னர் தினசரி அவரது ஹோல்டிங்கில் இருந்த ஷேர்களை விற்று வாங்கி புரோக்கரேஜ் ஜெனரேட் செய்தான். இதனால் அவனுடைய டார்கெட்டை ஓரளவுக்கு அடையமுடிந்தது.
சுரேஷின் போதாத நேரம் அவனது கணிப்புகள் தவறாகி மூன்று லட்ச ரூபாய் நஷ்டத்தில் நின்றது. வாரக்கடைசியில் ஹெட்ஆபீஸிலிருந்து கலெக்ஷன் விவரம் கேட்கையில், வேறு வழியில்லாமல் மூணு லட்ச ரூபாய் மதிப்புள்ள சண்முகத்தின் ஷேர்களை விற்று கணக்கை நேர் செய்தான்!
சண்முகமோ இந்த விவரம் எதுவும் தெரியாமல் ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்டை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியில் இருந்தார்! மூன்று லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சரிசெய்ய, சுரேஷ் மேலும் டிரேட் பண்ண ஆரம்பித்தான். வழக்கம் போல சண்முகத்தின் கணக்கில்தான்! ஆனால், நஷ்டம் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகமாக, இன்னொரு பக்கம் சண்முகத்தின் வாழ்நாள் போர்ட்ஃபோலியோ கரைந்து கரைந்து பாதியாகிவிட்டது!
சண்முகத்துக்கு டிவிடெண்டுகள் வரத் துவங்கியபோதுதான் ஷாக் அடித்தது. வழக்கமாக வருவதிலிருந்து எல்லாமே பாதி அளவுக்குத்தான் வந்திருந்தது. என்ன காரணம் என்று அந்தந்த கம்பெனிகளுக்கு கடிதம் எழுதிக் கேட்ட போது, ''உங்களிடமுள்ள ஷேர்களுக்கான டிவிடெண்ட்டைதான் அனுப்பியுள்ளோம்'' எனப் பதிலளித்தன. சந்தேகப்பட்டு, சுரேஷின் அலுவல கத்துக்குச் சென்று விசாரித்தார். அவன் திணற, மேனேஜரைப் பார்த்தார். அவர் விசாரிக்க... சுரேஷ் அழ ஆரம்பித்தான். மேனேஜர் சமாதானம் செய்து, 'பதினைந்து நாட்களில் சுரேஷ் சரி செய்து கொடுத்துவிடுவான்' என்று சொல்லி அனுப்பினார். 15 நாளில் ஒன்றும் நடக்கவில்லை.
சண்முகம் மீண்டும் மேனேஜரிடம் செல்ல நினைக்கையில் ஒருநாள் மாலை சுரேஷூம், கர்ப்பிணியான அவன் மனைவியும் சண்முகத்தின் வீட்டுக்கு வந்தனர். வந்த வேகத்தில் தடாலென சண்முகம் காலில் விழுந்து கெஞ்சி இன்னும் மூன்று மாத கால அவகாசம் கேட்க, சரி தொலையட்டும் என்று டைம் கொடுத்தார்.
மூன்று மாதமும் ஓடிப்போனது. காரியம் நடக்கவில்லை... மீண்டும் அங்கு போனால் மேனேஜர் மாறிவிட்டார். சுரேஷ் வேலையை விட்டுப் போய் ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்கள். புது மேனேஜரிடம் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொந்தளித்தால் அவரோ, ''எங்களுக்கு ஒண்ணும் தெரியலையே... நீங்க டிரேட் பண்ணியிருக்கீங்க. நஷ்டம் வந்திருக்கு. ஷேரை வித்திருக்கீங்க... அப்படித்தானே ரெக்கார்ட் இருக்கு'' என்றார். சண்முகத்துக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
தான் டிரேட் செய்யவேயில்லை என்ற சண்முகம், 'அப்படிச் செய்திருந்தால் அதற்கான புரூஃப் இருக்கிறதா...' என்று கேட்டார். அதற்கு அவர்களோ, கே.ஒய்.சி. நகல் முதல், இ-மெயில் ஐ.டி. கன்ஃபர்மேஷன் வரை காண்பித்தனர். சண்முகத்துக்கு தலை சுற்றியது. நண்பர்களிடம் வந்து என்ன செய்வது என்று புலம்பியபோது, ஒருவர் இன்வெஸ்டார் கிரீவன்ஸ் செல் விலாசம் கொடுத்து அங்கே விசாரிக்கச் சொன்னார்.
சண்முகம் அடுத்த நாளே புகார் எழுதினார். ஒரு வாரத்தில் அக்னாலெட்ஜ்மென்ட்டும் 15 நாளில் பதிலும் வந்தது. பதிலில் புது மேனேஜர் அவரிடம் நேரடியாகச் சொன்னது அப்படியே எழுதப்பட்டிருந்தது. சண்முகம் இன்வெஸ்டார் கிரீவன்ஸ் செல்லுக்கு போன் போட்டார். அவர்கள், ''இவ்வளவுதான் நாங்க செய்யமுடியும். இதற்கப்புறம் நீங்கள் ஆர்பிட்ரேஷன்தான் போகணும்'' என்றனர்.
சண்முகம் ஆர்பிட்ரேஷன் அப்ளை செய்தார். அதில் முதல் அப்ஜெக்ஷன் டிரேட் நடந்து முடிந்து 7 மாத காலம் ஆகிவிட்டது. தன் டிரேடில் நஷ்டமடைந்து ஷேரை விற்று அதை சரிசெய்த சண்முகம், பின்னர் மனம் மாறி கம்பெனியிடமிருந்து பணம் பறிக்கும் நோக்குடன் கேஸை ஃபைல் பண்ணியிருக்கிறார். மேலும் எக்ஸ்சேஞ்ச் சட்டப்படி புரோக்கர்/க்ளையன்ட் பிரச்னைகள் ஆறு மாத காலத்துக்குள் ஆர்பிட்ரேஷனுக்குக் கொண்டு வந்திருக்கவேண்டும். சண்முகம் அதிலிருந்து தவறிவிட்டார். மேலும் மெரிட்டிலும் இந்த கேஸ் செல்லாது. ஏனெனில் கான்ட்ராக்ட்கள் சண்முகத்தின் மெயில் ஐ.டி-க்கு தினமும் மாலை அனுப்பப்பட்டிருக்கிறது என்றது கம்பெனி.
ஆர்பிட்ரேஷனில் சண்முகம் காலதாமத காரணத்தால் தோற்றுப்போனார்! அவருடைய வாழ்நாள் சேமிப்பில் முக்கால் பகுதியையும் இழந்தார். சண்முகம் செய்த தவறுதான் என்ன?
1. தேவையில்லாமல் டிரேடிங் அக்கவுன்ட் தொடங்க ஃபாரத்தில் கையெழுத்திட்டது.
2. பவர் ஆஃப் அட்டர்னி என்றால் என்ன என்றே தெரியாமல் கையெழுத்திட்டது.
3. இ-மெயில் கான்ட்ராக்ட் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிக்கும் ஃபாரத்திலும் என்னவென்று படிக்காமல் கையெழுத்திட்டது.
4. சுரேஷ் மற்றும் மேனேஜர் சொன்ன வாய்வழி சமாதானங்களைக் கேட்டுக்கொண்டு நாட்களைக் கடத்தியது.
5. சுரேஷ் மற்றும் அவனுடைய மேனேஜரின் வாய் சால்ஜாப்புகளைக் கேட்டுக்கொண்டிராமல், எழுத்து மூலம் தவறை ஒப்புக்கொண்டு கடிதம் அனுப்பச் சொல்லி வாங்கியிருந்தால் வெற்றி அவருக்கே! ஏனென்றால் பிரச்னை ஏற்பட்ட ஆறு மாத காலத்துக்குள் அதனைக் கடிதப் பரி மாற்றம் மூலம் டாகுமென்ட் பண்ணியிருந்தால் காலதாமதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்!
பாவம் சண்முகம்!
No comments:
Post a Comment